×

கொத்தடிமைகளாக வேலை செய்தபோது 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர வியாபாரி: கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் மாதர் சங்கம் புகார்

செங்கல்பட்டு: சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டீனா நிருபர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொத்தடிமைகளாக மீட்கப்பட்ட இருளர் சமூகத்தை சேர்ந்த 20 குடும்பங்கள், படூரில் மரம் ஏற்றுமதி செய்யக்கூடிய தனிநபரிடம் வேலை செய்து வந்துள்ளனர். ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் என கடன் கொடுத்துவிட்டு, அதற்கான வட்டிக்காக 3 ஆண்டுகளாக ஆண்கள், பெண்கள் என 40 பேர் அந்த நபரிடம் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்துள்ளனர்.

அவர்கள் தங்குவதற்கு வெறும் கொட்டகை அமைத்து கொடுத்து, சரியான உணவு கொடுக்காமல், பாதுகாப்பு கொடுக்காமல், 3 ஆண்டுகளாக அவர்களை வைத்து அந்த நபர் கடுமையான வேலைகளை வாங்கி உள்ளார். உடல்நிலை சரி இல்லை என்று கூறுபவர்களை, அடித்து வேலை வாங்கி இருக்கிறார். இது தொடர்பான புகார் மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு சென்று, கொத்தடிமைகளாக இருந்த அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள். மீட்கப்பட்டவர்களில் 20 பெண்களை படூர் பாலு என்ற மர வியாபாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

மேலும், மீட்கப்பட்ட 20 குடும்பங்களையும் தேடி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும், சம்மந்தப்பட்ட நபர் கைது செய்யப்படவில்லை. அந்த குடும்பங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதால், மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் அவர்களுக்கு ஆதரவு அளித்து பாதுகாப்பு வழங்கி வருகிறது. எனவே, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாங்கள் புகார் அளித்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கொத்தடிமைகளாக வேலை செய்தபோது 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மர வியாபாரி: கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் மாதர் சங்கம் புகார் appeared first on Dinakaran.

Tags : Timber ,Matar Sangam ,DGP ,Chengalpattu ,All India Democratic Mother Association ,Democratic Youth Association ,Tamil Nadu Police ,Chennai ,
× RELATED ஆந்திர மாநில டிஜிபி நீக்கம்: தேர்தல் ஆணையம் உத்தரவு